பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை எனத்தகவல்

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

Update: 2019-11-06 16:17 GMT
கொல்கத்தா,

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். 

வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்களாக இருந்த அனைவரையும் போட்டியின் வர்ணனையாளர் அறைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது. 

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அனுமதி கேட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இ-மெயில் அனுப்பி இருக்கிறது. முன்னாள் டெஸ்ட் கேப்டன்களின் போட்டி அனுபவம் குறித்து கேட்டு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் டோனியையும் கவுரவ வர்ணனையாளராக கலந்து கொள்ளுமாறு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. 

ஆனால், தோனி வர்ணனையாளராக இருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  பிசிசியில் தற்போது உள்ள விதிகளின் படி, தோனி இவ்விவகாரம் பற்றி நேரடியாக கருத்து கூறுவது இரட்டை ஆதாயம் பிரச்சினையை உருவாக்கும் என்பது கவனிக்கத்தக்கது. 

மேலும் செய்திகள்