தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது

Update: 2019-12-27 23:57 GMT
செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவின் புயல்வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 53.2 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ டென்லி 50 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 29 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிலாண்டர் 4 விக்கெட்டுகளும், ரபடா 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ஜே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்து மொத்தம் 175 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் சரிந்தன. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்