ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடக அணி 122 ரன்னில் சுருண்டது

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா அணி 122 ரன்னில் சுருண்டது.

Update: 2020-03-02 02:01 GMT
கொல்கத்தா, 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால்-கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பெங்கால் அணி தொடக்க நாளில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து பெங்கால் அணி 312 ரன்னில் ஆட்டம் இழந்தது. அனுஸ்டப் மஜூம்தர் 149 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 36.2 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. இந்த சீசனில் கர்நாடக அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். லோகேஷ் ராகுல் (26 ரன்), கேப்டன் கருண் நாயர் (3), மனிஷ் பாண்டே (12 ரன்) என்று நட்சத்திர வீரர்கள் யாரும் அந்த அணியில் ஜொலிக்கவில்லை. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர்கள் 21 வயதான இஷான் போரெல் 5 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

குஜராத்துக்கு எதிரான மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 5-217 ரன் என்ற நிலையுடன் நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி 304 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஷெல்டன் ஜாக்சன் சதம் (103 ரன்) அடித்தார். அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 6 விக்கெட்டுக்கு 119 ரன்களுடன் தடுமாறியது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்