இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ஒத்திவைப்பு

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலாவது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி காலேயில் தொடங்க இருந்தது.

Update: 2020-03-14 00:32 GMT
கொழும்பு,

இந்த நிலையில் கொரோனா வைரசின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து அணியின் இலங்கை டெஸ்ட் தொடர் நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்த தொடரை தள்ளி வைப்பது என்றும், வீரர்கள், அணியின் உதவியாளர்கள் உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடர் வேறொரு நாட்களில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 463 ரன்கள் குவித்தது. ஜாக் கிராவ்லி (105 ரன்), கேப்டன் ஜோ ரூட் (102 ரன்) சதம் அடித்தனர். இலங்கை லெவன் அணி 2-வது நாளான நேற்று 40 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்திருந்த போது, எஞ்சிய இரு நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, பயிற்சி ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்