எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி

பந்து மீது எச்சிலால் தேய்க்காமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் என்று இந்திய பவுலர் முகமது ஷமி கூறியுள்ளார்.

Update: 2020-06-04 01:15 GMT
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘இன்ஸ்டாகிராம்’ கலந்துரையாடலின் போது கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்துள்ளது. இது பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும். சிறுவயதில் இருந்தே பந்து மீது எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக பந்தை பளபளப்பாக்க எச்சிலால் தேய்ப்பது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்று.

அதே சமயம் எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும். ஈரப்பதம் இல்லாத வறண்ட பந்தை ஒரு பக்கம் தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்கும் பட்சத்தில், நிச்சயம் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும். வியர்வை, எச்சில் இரண்டும் பந்து வீச்சு யுக்தியில் வித்தியாசமானது. வியர்வையால் பந்தை தேய்ப்பது ஸ்விங்குக்கு ஒத்துழைக்காது என்று நினைக்கிறேன். எச்சிலை பயன்படுத்தாமல் நான் ஒருபோதும் பந்து வீசியது கிடையாது. ஆனால் இப்போது கொரோனா அச்சத்தால் எச்சிலை தவிர்க்க வேண்டியது முக்கியம். ஊரடங்கு காலத்தில் யாரும் பேட், பந்தை தொடவே இல்லை. எனவே 10-15 நாட்கள் பயிற்சி முகாம் அல்லது 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக ஒரு சில தொடர்கள் மீண்டும் உத்வேகத்துக்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருக்கும்.

டோனியின் தலைமையின் கீழ் ஐ.பி.எல். தவிர்த்து மற்ற அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி இருக்கிறேன். தன்னுடைய அணி வீரர்களை திறம்பட வழிநடத்துவதில் அவருக்கு நிகர் அவர் தான். நாம் டோனியுடன் தான் பழகுகிறோம் என்ற எண்ணம் கூட வராது. அந்த அளவுக்கு சக வீரர்களை சிறப்பாக வழிநடத்துவார்.

டோனி மிகப்பெரிய வீரர். அவருடன் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் நிறைய உண்டு. இப்போதும், அவர் வருவார், அவருடன் ஜாலியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். டோனியிடம் கவர்ந்த இன்னொரு விஷயம், சக வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவது அவருக்கு பிடிக்கும். அவருடன் எப்போதும் 2-4 பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். பிறகு நள்ளிரவு வரை அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம். இதையெல்லாம் தவற விடுகிறேன் என்று ஷமி கூறினார்.

மேலும் செய்திகள்