டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கிராவ்லி முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி 53 இடங்கள் முன்னேறியுள்ளார்.

Update: 2020-08-27 01:07 GMT
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 2-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 267 ரன்கள் குவித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி 53 இடங்கள் எகிறி தனது சிறந்த நிலையாக 28-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் கம்மின்சும் (ஆஸ்திரேலியா), 2-வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராட்டும் (இங்கிலாந்து) தொடருகிறார்கள். சவுதம்டன் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்திருக்கிறார். அவர் 6 இடம் உயர்ந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரண்டு டெஸ்டுகளை தவற விட்டதால் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறினார்.

மேலும் செய்திகள்