நடுவரின் முடிவை மாற்றும் வகையில் டோனி நடந்து கொண்டாரா?

ஷர்துல் தாகூர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க முடியவில்லை.

Update: 2020-10-14 12:08 GMT
துபாய்,

துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் 168 என்ற இலக்கை ஐதராபாத் அணி சேஸ் செய்து கொண்டிருந்தது. ஆட்டத்தின் 19-வது ஓவரில் ரஷீத் கான் பேட் செய்து கொண்டிருந்த போது சென்னை வீரர் ஷர்துல் தாகூர் வீசினார்.  

ஷர்துல் தாகூர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க முடியவில்லை. உடனே கள நடுவரான பால் ரீஃபில் அதை வைட் என அறிவிப்பதற்காக தனது கைகள் இரண்டையும் விரிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட தோனி கோபமடைந்து  செய்கை மூலம் தனது அதிருப்தியை காட்டினார்.

இதைக் கண்ட நடுவர் பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். இதனால் வைட் வழங்கப்படவில்லை. எனினும் இதைக் கண்ட  ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பவுண்டரி அருகே இருந்தபடி மிகவும் கோபமடைந்தார். தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதையடுத்து மறுமுனையில் நடுவரின் அருகில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஷபாஸ் நதீம் இதுபற்றி நடுவரிடம் விவாதித்தார். இந்த விவகாரத்தில், டோனிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில்  கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்