தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 340 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 340 ரன்கள் குவித்தனர்.

Update: 2020-12-26 20:06 GMT
செஞ்சூரியன், 

இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றம் கண்டது. இதன் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடி அணியை மோசமான நிலைமையில் இருந்து மீட்டனர். அத்துடன் அதிரடியாக ஆடிய இவர்கள் ரன்ரேட்டை 4 ரன்களுக்கு குறையாமல் நகர்த்தினர். தினேஷ் சன்டிமால் 85 ரன்களும், டிக்வெல்லா 49 ரன்களும் எடுத்தனர். 79 ரன்கள் (11 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்த தனஞ்ஜெயா டி சில்வா தொடையில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேற நேரிட்டது.

முதல் நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 85 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்துள்ளது. ஷனகா (25 ரன்), கசுன் ரஜிதா (7 ரன்) களத்தில் உள்ளனர். முன்னதாக, ‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக விரல்களை மடக்கி ஒரு கையை மேல் நோக்கி தூக்கியபடி நின்றனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்