வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 395 ரன்கள் இலக்கு

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 395 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Update: 2021-02-06 22:52 GMT
சட்டோகிராம்,

வெஸ்ட்இண்டீஸ் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேச அணி 430 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் அணி 259 ரன்னும் எடுத்தன. 171 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மொமினுல் ஹக் 31 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 18 ரன்னில் நடையை கட்டினார். இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ், மொமினுல் ஹக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். லிட்டான் தாஸ் 96 பந்துகளில் அரைசதத்தையும், மொமினுல் ஹக் 173 பந்துகளில் சதத்தையும் கடந்தனர். மொமினுல் ஹக் எடுத்த 10-வது சதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அவர் பதிவு செய்த 7-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்டான் தாஸ் 69 ரன்னிலும் (112 பந்து, 5 பவுண்டரி), மொமினுல் ஹக் 115 ரன்னிலும் (182 பந்து, 10 பவுண்டரி) அடுத்தடுத்த ஓவர்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். தேனீர் இடைவேளைக்கு முன்பு வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. ஜான் கேம்ப்பெல் 23 ரன்னிலும், பிராத்வெய்ட் 20 ரன்னிலும், ஷாய்னி மோஸ்லி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3 விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் கைப்பற்றினார். கிருமா பொன்னெர் (15 ரன்), கைல் மேயர்ஸ் (37 ரன்) களத்தில் உள்ளனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு மேலும் 285 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 7 விக்கெட் உள்ளது. இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்