வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 395 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை - கைல் மேயர்ஸ் இரட்டை சதம் விளாசினார்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 395 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.

Update: 2021-02-08 00:01 GMT
சட்டோகிராம்,

வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 430 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களும் சேர்த்தன. 171 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 8 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து 395 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரர்கள் கிருமா பொன்னெர் (15 ரன்), கைல் மேயர்ஸ் (37 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் மேற்கொண்டு 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான சூழலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்தனர். பொன்னெர்- கைல் மேயர்ஸ் ஜோடியினர் வியப்புக்குரிய வகையில் விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இவர்கள் ஸ்கோர் 275 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். பொன்னெர் 86 ரன்களில் (245 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். இருப்பினும் மறுமுனையில் எதிரணி பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய கைல் மேயர்ஸ் கடைசி வரை நிலைத்து நின்று மட்டையை சுழட்டி தங்கள் அணிக்கு 15 பந்துகள் மீதம் இருக்கையில் திரில் வெற்றியை தேடித்தந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 127.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 395 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆசிய மண்ணில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் சிறந்த சேசிங்கில் இது 5-வது இடத்தை பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 418 ரன்களை விரட்டிப்பிடித்ததே உலக சாதனையாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்டில் பிரமாதமாக ஆடிய புதுமுக வீரர் 28 வயதான கைல் மேயர்ஸ் 210 ரன்களுடன் (310 பந்து, 20 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார். அறிமுக டெஸ்டிலேயே இரட்டை சதம் விளாசிய 6-வது வீரர், வெஸ்ட் இண்டீஸ் அளவில் 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் 4-வது இன்னிங்சில் (இலக்கை விரட்டும் போது) அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் நொறுக்கிய முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 60 புள்ளிகளை தட்டிச் சென்றது.

வங்காளதேசம்-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந்தேதி டாக்காவில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்