விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் மும்பை வீரர் பிரித்வி ஷா 227 ரன்கள் குவித்து சாதனை

விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் மும்பை வீரர் பிரித்வி ஷா 227 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

Update: 2021-02-26 00:39 GMT
ஜெய்ப்பூர்,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை - புதுச்சேரி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மும்பை அணியின் பொறுப்பு கேப்டனான பிரித்வி ஷா 152 பந்துகளில் 31 பவுண்டரி, 5 சிக்சருடன் 227 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 133 ரன்களும் (58 பந்து, 22 பவுண்டரி, 4 சிக்சர்) திரட்டினர். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை போட்டி வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற மகிமையை 21 வயதான பிரித்வி ஷா பெற்றார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டில் கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் 212 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அத்துடன் லிஸ்ட்-ஏ வகை போட்டியில் (உள்ளூர் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில்) இரட்டை சதம் அடித்த 8-வது இந்தியராக சாதனை பட்டியலில் பிரித்வி ஷா இணைந்தார். ஏற்கனவே தெண்டுல்கர், ஷேவாக், ஷிகர் தவான், ரோகித் சர்மா, கரண் குஷால், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 38.1 ஓவர்களில் 224 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் மும்பை 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

மேலும் செய்திகள்