தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 189 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 189 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை படைத்தது.

Update: 2021-04-11 02:45 GMT
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. மார்க்ராம் (51 ரன்), பொறுப்பு கேப்டன் ஹென்ரிச் கிளாசென் (50 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்ட போது, இதன் 5-வது பந்தில் பாகிஸ்தான் இலக்கை எட்டிப்பிடித்தது. அந்த அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முகமது ரிஸ்வான் 74 ரன்களுடன் (50 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் 100-வது (164 ஆட்டம்) வெற்றி இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் சொந்தமாக்கியது.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்