2024 முதல் 2031-ம் ஆண்டு வரை நடக்க இருக்கும் 20 ஓவர், ஒரு நாள் உலக கோப்பை போட்டியை நடத்த இந்தியா உள்பட 17 நாடுகள் விருப்பம்

2024 முதல் 2031-ம் ஆண்டு வரை நடக்க இருக்கும் 20 ஓவர், ஒரு நாள் உலக கோப்பை போட்டியை நடத்த இந்தியா உள்பட 17 நாடுகள் விருப்பம்.

Update: 2021-07-05 22:37 GMT
துபாய்,

2024-2031-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது உறுப்பு வாரியங்களுடன் கலந்து ஆலோசித்து ஏற்கனவே அறிவித்தது. இந்த 8 ஆண்டு காலத்தில் ஆண்கள் பிரிவில் 2 ஒரு நாள் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை, 2 சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் 4 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. பெண்கள் பிரிவில் 2 ஒரு நாள் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் இரண்டு 20 ஓவர் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் எவை? என்பதை அடையாளம் காணும் பணியை ஐ.சி.சி. தொடங்கி இருக்கிறது. இந்த போட்டிகளை நடத்த விருப்பம் உள்ள நாடுகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த போட்டிகளை நடத்த இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, மலேசியா, நமிபியா, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் விருப்பம் தெரிவித்து தொடக்க கட்ட விண்ணப்பங்களை அளித்து இருக்கின்றன. அடுத்தகட்டமாக கூடுதல் விவரங்களுடன் விண்ணப்பங்களை தாக்கல் செய்வார்கள். அதனை ஐ.சி.சி. போர்டு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு ஒருநாள் உலக கோப்பை, ஒரு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

மேலும் செய்திகள்