19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்திய ஏ அணியில் நேயன் காங்கேயனுக்கு இடம்- ஈரோட்டை சேர்ந்தவர்
19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியில் ஈரோட்டை சேர்ந்த நேயன் காங்கேயன் இடம் பிடித்து உள்ளார்.;
ஈரோடு
19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியில் ஈரோட்டை சேர்ந்த நேயன் காங்கேயன் இடம் பிடித்து உள்ளார்.
நேயன் காங்கேயன்
அந்தியூர் அருகே உள்ள நகலூர் கொண்டையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம். இவரது மனைவி மாதங்கி, மொடக்குறிச்சி பாசூர் பழனிக்கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். ஷியாம்-மாதங்கி தம்பதியினர் சென்னையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் மகன் நேயன் காங்கேயன். 18 வயதான இவர் கிரிக்கெட் வீரர். சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வமாக விளையாடி வந்த நேயன் காங்கேயன் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வருகிறார். இந்த போட்டியில் இருந்து சிறந்த வீரர்கள் 19 வயதுக்கு உள்பட்டோர் உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய ஏ அணி வீரர்
இந்திய அணிக்கு ஈரோடு வீரர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது சிறப்புக்கு உரியதாகும். நேயன் காங்கேயன் சென்னையில் படித்தபோது 14 வயது வரை தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாடினார். 16 வயதுக்கு உள்பட்டோர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் புதுச்சேரி அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் கோவா அணிக்கு எதிராக 303 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் சாதனை படைத்தார்.
அவருக்கு அப்போதைய புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது 18 வயதாகும் நேயன் காங்கேயன் 19 வயதுக்கு உள்பட்ட மாநிலங்களிடையேயான வினூ மங்கட் கோப்பை போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக 109 பந்தில் 103 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். இதனால் இந்திய ஏ அணிக்கு தேர்வு பெற்று உள்ளார். இவரது பயிற்சியாளராக ஸ்ரீகுமார் நாயர் உள்ளார்.
விவசாய குடும்பம்
நேயன் காங்கேயனின் தந்தை ஷியாம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பெற்றோர் கே.எஸ்.சந்திரமோகன்-பத்மாவதி தம்பதியினர் நகலூர் கொண்டையம்பாளையத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இதுபோல் மாதங்கியின் தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் வசித்து வருகிறார்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்த நேயன் காங்கேயன் இந்திய ஏ அணிக்கு தேர்வு பெற்று இருப்பது அவரது உறவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.