தோனி இல்லையென்றால் என் கெரியரே.. - இந்திய முன்னாள் வீரர் ஓபன் டாக்

தோனி இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி. உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த சாதனையாளர்.;

Update:2025-12-23 10:01 IST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த சாதனையாளர். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். விக்கெட் கீப்பங்கிலும் சாதனைகள் படைத்துள்ள அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் திறமை படைத்தவர்.

அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல இளம் வீரர்களின் திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டியவர். ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

முன்னதாக அவர் கேப்டனாக இருந்த சமயத்தில் கம்பீர், ஹர்பஜன், சேவாக், இர்பான் பதான் போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்ட அவர் விராட் கோலி, தவான், ரோகித், அஸ்வின் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து சென்றார். அவரது அந்த முடிவால்தான் இந்திய அணி மற்ற நாடுகளை போல் அல்லாமல் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றாலும் தடுமாறாமல் தொடர்ந்து அசத்தி வருகிறது.

அதே சமயம் தங்களது கெரியரின் இறுதி கட்டத்தில் தோனி வாய்ப்பளிக்காமல் கழற்றி விட்டதாக சேவாக், கம்பீர், இர்பான் பதான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் மகேந்திரசிங் தோனி இல்லையென்றால் தனது கெரியரே இல்லாமல் போயிருக்கும் என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “தோனி இல்லாவிட்டால் என் கெரியர் சிறப்பாக இருந்திருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர் இல்லாவிட்டால் நான் அணியில் கூட இருந்திருக்க மாட்டேன். நான் அவருடைய தலைமையின் கீழ்தான் அணிக்குள் வந்தேன். அதன் பின்பும் நான் கம்பேக் கொடுத்தேன். என்னை மீண்டும் அணியில் சேர்க்க ஒரு கேப்டனாக அவர் ஒப்புக்கொண்டிருப்பார். அதனால்தான் என்னால் அணிக்குள் திரும்பி வர முடிந்தது. எனவே நீங்கள் நேர்மறையாக பார்ப்பதற்கான விஷயங்களும் இருக்கின்றன. எனக்கு ஆதரவு கிடைத்தது.

பிளேயிங் லெவனில் விளையாடியபோது தோனி என்னிடம் வந்து ஆலோசனைகள் தெரிவிக்கவில்லை என்ற சூழ்நிலைகள் இருந்ததில்லை. அவர் எப்போதும் என்னிடம் ஆலோசனைகளை சொல்வார். நான் என்னுடைய கடைசி போட்டியை நியூசிலாந்திற்கு எதிராக விளையாடினேன். தோனி கேப்டனாக இருந்தார்.

அது ஒரு நெருக்கமான ஆட்டம். நான் பந்து வீச வந்தேன், நாங்கள் 260-270 ரன்கள் எடுத்திருந்தோம். ரன்களை கட்டுப்படுத்த முயற்சித்த நான் விக்கெட்டுகளை எடுக்காமல் இருக்க நினைத்தேன். ஓரிரு ஓவர்களுக்குப் பிறகு, தோனி என்னிடம் வந்து, நான் இயல்பாக பந்து வீசவில்லை என்று கூறினார். அதிகம் யோசிக்காமல் எப்போதும் போல பந்து வீச சொன்னார். நான் அதைச் செய்தேன். பின்னர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினேன்.

அப்போது மீண்டும் வந்த தோனி, ‘இது தான் உங்களுடைய பவுலிங், இதையே செய்யுங்கள்’ என்று சொன்னார். கடைசியில் அது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. அது ஆட்டத்தையே மாற்றிய ஒரு ஸ்பெல். நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதுதான் என்னுடைய சிறந்த ஸ்பெல் என்றும் நினைக்கிறேன். அன்றைய நாளில் நான் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால், இந்தியா தோற்றுவிடும் என்பது அவரது எண்ணம். இப்படித்தான் அவர் என்னை ஆதரித்தார்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்