ஜூனியர் ஆசிய கோப்பை: இந்திய வீரர்கள் மீது ஐ.சி.சி.-ல் புகார்... - பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்

ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-12-23 12:54 IST

image courtesy:twitter/@ACCMedia1

கராச்சி,

12-வது இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது. 172 ரன்கள் குவித்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

சீனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக், சூப்பர்4 சுற்று, இறுதிப்போட்டி என்று மூன்று முறை இந்தியாவிடம் உதை வாங்கியது. அத்துடன் இந்திய வீரர்கள் அவர்களுடன் கைகுலுக்க மறுத்ததால் அதை பெரிய சர்ச்சையாக்கினர்.

தற்போது இளையோர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதும் அந்த வெற்றியை திருவிழா போல் அவர்கள் கொண்டாடினர். இந்த தொடரிலும் இந்திய அணியினர் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த இறுதி போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 347 ரன்களை குவித்து அசத்தியது. ஆனால் அடுத்து விளையாடிய இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரேவை அவுட்டாக்கிய பாகிஸ்தான் பவுலர் அலி ராசா விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடினார். இதனால் கோபமடைந்த மாத்ரே சில கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டி அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

அதே போல வைபவ் சூரியவன்ஷியை அவுட்டாக்கிய அலி ராசா மீண்டும் வெறித்தனமாக கொண்டாடினார். அதனால் கோபமடைந்த சூரியவன்ஷியும் தம்முடைய காலணிகளை காண்பித்து சில வார்த்தைகளைச் சொல்லி அவருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டு பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் இந்திய இளம் வீரர்கள் மீது ஐ.சி.சி.-ல் புகார் அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தூண்டிவிட்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ஐசிசி-யிடம் முறையாகத் தெரிவிக்கும். அரசியலும் விளையாட்டும் எப்போதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்