உள்ளூர் கிரிக்கெட்டின் பலம்… மாஸ் கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் - சாத்தியமானது எப்படி?

இஷான், சையது முஷ்டாக் அலி தொடரில் மட்டும் 517 ரன்கள் குவித்திருந்தார்.;

Update:2025-12-23 15:40 IST

மும்பை,

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, சொந்த காரணங்களால் அதிலிருந்து விலக முடிவெடித்த இஷான் கிஷன், அதே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மூலம் இந்திய அணியில் பிடித்த நிகழ்வின் பின்னணி தெரியுமா? அது குறித்து பார்ப்போம்,

இஷான் கிஷன்

2023-ம் ஆண்டுவாக்கில் இந்திய டி20 அணியின் முக்கியமான வீரராக இருந்தவர் விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன். ஆனால், 2024 பிப்ரவரியில் திடீரென பிசிசிஐ-யின் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து காணாமல் போனார் இஷான். காரணம், அப்போது பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, வீரர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் தான் என்று சொல்லப்பட்டது. அந்தக் கடிதத்தில், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி வலியுறுத்தியிருந்தார் ஜெய் ஷா. உள்ளூர் தொடர்களைப் புறந்தள்ளிவிட்டு பெரும்பாலான வீரர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக எழுந்த புகாரை அடுத்தே இந்தக் கடிதம் பிசிசிஐ தரப்பில் இருந்து முன்னணி வீரர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அப்போது, திடீரென பிசிசிஐ-யிடம் இஷான் கிஷன் ஒரு கோரிக்கை வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்வதாக இஷான் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால், இஷான் கிஷானின் இந்தக் கோரிக்கைக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து கடுமையான எதிர்வினை வந்தது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத சமயத்தில், உள்ளூர் தொடர்களில் பங்கேற்காமல், இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியாவோடு பரோடாவில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இருந்தார். இதுவும் பிசிசிஐ தரப்பில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. விளைவு, வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷனை 2024 பிப்ரவரியில் நீக்கியது பிசிசிஐ.

உள்ளூர் தொடர்களில் ஈடுபாடு

ஒரு கட்டத்தில் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிய இஷான் கிஷன், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்திய அணியில் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தோடு கடுமையாக உழைக்கத் தொடங்கினார். அவரின் உழைப்புக்குப் பலனும் கிடைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு கம்பேக் கொடுத்த அவர், தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். துலீப் கோப்பை தொடரில் இந்தியா பி அணிக்கெதிராக இந்தியா சி அணிக்காக விளையாடிய அவர், அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் எடுத்திருந்தார்.

அத்தோடு அவரின் ரன் வேட்டை நின்றுவிடவில்லை. தனது கடுமையான உழைப்பினால், ஜார்க்கண்ட் அணியிலும் இஷானுக்கு இடம் கிடைத்தது. 2025 சையது முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணி நிர்வாகம் அவரின் தலைமைப் பண்பின் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக்கி அழகு பார்த்தது. அணி நிர்வாகம், தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குப் பலனாக அந்த அணிக்கு கோப்பையையும் வென்று பரிசளித்திருக்கிறார். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜார்க்கண்ட் அணி வென்றிருக்கும் முதல் கோப்பையும் இதுதான்.

கேப்டனாக மட்டுமல்லாமல் ஒரு பேட்டராகவும் ஜொலித்த இஷான், சையது முஷ்டாக் அலி தொடரில் மட்டும் 10 போட்டிகளில் 517 ரன்கள் குவித்திருந்தார். இதன் சராசரி 57.32. ஸ்டிரைக் ரேட் 197.32. இந்த மிரட்டலான நம்பர்கள் அவருக்கு 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடத்தை உறுதி செய்திருக்கிறது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை தன்னைத் தவிர்த்துவிட்டு அணியைத் தேர்வு செய்ய முடியாது என்கிற நிதர்சனத்தைத் தனது திறமையின் மூலம் நிரூபித்து மீண்டும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய இருக்கிறார் இஷான் கிஷன். மற்றொருபுறம், இது உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்