கில், பாண்ட்யா இல்லை.. இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் - மாண்டி பனேசர் கணிப்பு

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.;

Update:2025-12-23 15:51 IST

image courtesy:PTI

லண்டன்,

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டு அணியை தேர்வு செய்தனர்.

சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடருகிறார். ஆனால் அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. துணை கேப்டன் பொறுப்பு அக்சர் படேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதில் சுப்மன் கில் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக உள்ள அவரை ஆல் பார்மட் கேப்டனாக்கும் நோக்கில் டி20 துணை கேப்டன் பதவியை பி.சி.சி.ஐ. அவருக்கு கொடுத்தது.

ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தொடர்ந்து மோசமான பார்மில் தடுமாறி வந்தார். அதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. இருப்பினும் அணியின் சேர்க்கைக்காகவே அவரை எடுக்கவில்லை என அஜித் அகர்கர் மற்றும் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்தனர்.

இதனால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லை வளர்க்கும் நோக்கத்திலிருந்து பி.சி.சி.ஐ. பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் தற்போது கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2026 டி20 உலகக் கோப்பையுடன் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அப்போதுதான் அடுத்த (2028) டி20 உலகக் கோப்பைக்கு புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணியை உருவாக்க முடியும்.

அது போன்ற சூழ்நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு முன் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் பி.சி.சி.ஐ., சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கியது.

இந்நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்பது குறித்து இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கணிப்பின் படி, தற்போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அக்சர் படேலே இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் என்று கணித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்