ஐ.பி.எல் தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்

சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக, ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார்.

Update: 2022-05-09 23:38 GMT
image courtesy: IPL twitter via ANI
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இடதுகையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தபோட்டி தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார். 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த ஆட்டத்தின் போது காயம் அடைந்த சூர்யகுமார் யாதவின் நிலைமை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதிநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது. 

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் கை பெருவிரலில் காயம் அடைந்ததால் முதல் 2 லீக் ஆட்டங்களை தவற விட்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் காயத்தில் சிக்கி இருக்கிறார். 

இதனால் அவர் அடுத்த மாதம் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா? என்றகேள்விக்குறி எழுந்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் 8 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்துள்ளார். அவரது விலகல் மும்பை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.

மேலும் செய்திகள்