டாப்லி அபாரம்: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

Update: 2024-05-25 17:15 GMT

Image Courtacy: ICCTwitter

பர்மிங்காம்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் லீட்சில் கடந்த 22-ந்தேதி நடைபெற இருந்தது. ஆனால் அங்கு இடைவிடாது பெய்த மழையால் இந்த ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுகிடையேயான இரண்டாவது டி20 போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோஸ் பட்லர் 84 (51) ரன்களும், வில் ஜாக்ஸ் 37 (23) ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிதி 3 விக்கெட்டுகளும், வாசிம் மற்றும் ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் ( 32 ரன்கள்), பக்தர் சமான் (45 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக, சிறப்பாக பந்து வீசிய டாப்லி 3 விக்கெட்டுகளும், மொயின் அலி மற்றும் ஆர்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன்படி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்