இறுதிப்போட்டிக்கு முன் என் அம்மாவிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டேன் அதற்கு அவர்.. - ரஹ்மனுல்லா குர்பாஸ்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-05-27 02:34 GMT

Image Courtesy: AFP

சென்னை,

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவின் அபார் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் கொல்கத்தா வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய அம்மா போட்டியை பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் தற்போது நன்றாக இருக்கிறார். இப்போட்டிக்கு முன்பாக என்னுடைய அம்மாவிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் எதுவும் வேண்டாம். நீ இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் அதுவே எனக்கு மிகப்பெரிய பரிசு. உன்னுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்று சொன்னார்.

பில் சால்ட் இந்த வருடம் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடினார். நான் அடுத்ததாக நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராக விரும்பினேன். அதே சமயம் சால்ட் காயத்தை சந்தித்தால் நான் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதற்கு தயாராக இருந்தேன்.

ஐ.பி.எல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். அதற்காக அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். 2 மாதங்கள் கடினமாக உழைக்கும் உங்களுக்கு இது போன்ற முடிவு கிடைப்பது மிகவும் ஸ்பெஷலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்