அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவார்.. காசி விஸ்வநாதன் நம்பிக்கை

அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவார் என சென்னை அணி சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Update: 2024-05-23 12:55 GMT

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய தோனி 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். 42 வயதான அவர் நடப்பு சீசன் தொடங்கும் முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். இறுதி கட்டத்தில் மட்டும் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தோனி அதிரடியாக சிக்சர்களை விளாசியதுடன் மொத்தம் 161 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.50 ஆகும்.இருப்பினும் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் தோனியின் கடைசி தொடர் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.ஆனால் இதுவரை தோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சென்னை அணி நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது ,

எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ். தோனிக்கு மட்டும் தான் தெரியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும். என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்