ஹூசைன் சாண்டோ அசத்தல் சதம்: இலங்கையை வீழ்த்திய வங்காள தேசம்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி வெற்றிபெற்றது.

Update: 2024-03-13 17:04 GMT

Image Courtacy: ICCTwitter

சட்டோகிராம்,

வங்காளதேசம் -இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஆனால் பின் வரிசையில் ஜனித் லியனகே தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அபாரமாக பந்து வீசிய வங்காளதேச பந்து வீச்சாளர்கள் இலங்கையை 48.5 ஓவர்களில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஜனித் லியனகே 67 ரன்களும், குசல் மெண்டிஸ் 59 ரன்களும் அடித்தனர். வங்காளதேசம் தரப்பில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது மற்றும் தன்சீம் ஹசன் சாகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் கேப்டன் சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரகீம் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இலங்கை பந்து வீச்சை சிறப்பாக சமாளித்த இந்த ஜோடி அணியை வெற்றி பெற வைத்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் மூலம் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த வங்காளதேசம் 44.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து  இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்காள தேச அணியின் சார்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் சாண்டோ 122 ரன்களும், முஷ்பிகுர் ரகீம் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் சார்பில் தில்சன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளும், மதுஷன் மற்றும் லகிரு குமரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி வெற்றிபெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்காள தேச அணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்