லண்டன்: பிரபல இந்திய வீராங்கனையின் ஓட்டல் அறைக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு- பகீர் சம்பவம்

தனது பொருட்கள் லண்டனில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக இந்திய வீராங்கனை பரபரப்பு புகார் தெரிவித்து இருக்கிறார்.

Update: 2022-09-26 15:44 GMT

Image Courtesy: Twitter @IamTaniyaBhatia

சென்னை,

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.

கடைசியாக இங்கிலாந்து அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி முடிந்த போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்த ரன் அவுட் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இது குறித்த பேச்சுகள் முடிவுக்கு வரும் முன், இந்திய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்டர் தானியா பாட்டியா லண்டன் ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து தனது பணம் நகை மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை யாரோ கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக டுவிட்டரில் கடுமையான புகார் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மேரியட் ஹோட்டல் லண்டன் மைடா வேல் நிர்வாகத்தின் மேல் நான் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்தேன். நான் இல்லாத பொழுது எனது தனிப்பட்ட அறைக்குள் யாரோ புகுந்து, எனது நகை, பணம் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடிச் சென்று விட்டார்கள். இந்தக் கொள்ளை நான் இந்திய அணியின் ஒரு வீராங்கனையாக தொடரும்போது நடந்திருக்கிறது "என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஓட்டல் நிர்வாகத்தை சாடி அவர் தெரிவித்துள்ள கருத்தில் "இந்த விஷயத்தில் விரைவான விசாரணை மற்றும் தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமான ஹோட்டல் பார்ட்னரில் இது போன்ற பாதுகாப்பு இல்லாதது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதன் மூலம் அவர்களுக்கும் இதைப் பற்றிய தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் " என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்