ஜெய்ஸ்வால் "அபார சதம்" - மும்பை அணியை ஊதித் தள்ளிய ராஜஸ்தான் அணி

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

Update: 2024-04-22 18:15 GMT

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 6 ரன்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய முகமது நபி சிறிது நேரம் அதிரடி காட்டிய நிலையில் 23 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா - நேஹால் வதேரா இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தது. இவர்களில் திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் வதேரா 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 65 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இதனிடையே 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 31 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் மழை நின்றதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியநிலையில் பட்லர் 35 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியினர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். .

 

முடிவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 7 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், சஞ்சு சாம்சன் 38 (28) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 183 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐ.பி.எல் தொடரின் 5-வது தோல்வி இதுவாகும். இதேபோல் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணி, தனது 7-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்