ஐ.பி.எல்.: வெற்றி கணக்கை தொடங்குமா டெல்லி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Update: 2024-03-28 00:12 GMT

image courtesy: twitter/@rajasthanroyals

ஜெய்ப்பூர்,

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. முதலில் ஆடி 193 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி எதிரணியை 173 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (82 ரன்கள்), ரையான் பராக் (43 ரன்கள்) ஆகியோர் அசத்தினர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஹெட்மயர், துருவ் ஜூரெல் என்று அதிரடி பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், நன்ரே பர்கர், ஆர்.அஸ்வின், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் ஷர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். உள்ளூர் அனுகூலத்துடன் தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் பணிந்தது. டெல்லி நிர்ணயித்த 175 ரன் இலக்கை 4 பந்துகள் மீதம் வைத்து பஞ்சாப் எட்டிப்பிடித்தது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் என்று சிறந்த வீரர்கள் இருந்தாலும், திடமான பார்ட்னர்ஷிப் அமையாதது டெல்லி அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. எனவே அந்த அணியில் ஒரு சில வீரர்களாவது நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும்.

பந்து வீச்சில் கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 52 ரன்களை வாரி வழங்கிய மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது தேவையானதாகும். தங்களுடைய வெற்றியை நீடிக்க ராஜஸ்தான் அணியும், வெற்றி கணக்கை தொடங்க டெல்லி அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்