ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக திருமணத்தை தள்ளிவைத்த ரஜத் படிதார்

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக ரஜத் படிதார் தனது திருமணத்தை தள்ளிபோட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2022-05-26 20:26 GMT

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் (12 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார். ஒரே நாளில் ஹீரோ அந்தஸ்தை எட்டிவிட்ட 28 வயதான ரஜத் படிதார் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கிடையாது.

பெங்களூரு அணியில் சிசோடியா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரூ.20 லட்சத்திற்கு ரஜத் படிதார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது அவர் புகழ் மழையில் நனைகிறார். விராட் கோலி கூறுகையில், 'நான் எத்தனையோ சிறந்த இன்னிங்சை பார்த்து இருக்கிறேன். ஆனால் ரஜத் படிதாரின் இன்னிங்ஸ் ஏற்படுத்திய தாக்கம் போல் வேறு எதையும் உணர்ந்ததில்லை. நெருக்கடியான சூழல், மிகப்பெரிய போட்டி, அதுவும் சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு வீரர் சதம் அடித்திருப்பது பிரமிப்பானது. சக வீரராக அவரை பாராட்டியாக வேண்டும்' என்றார்.

பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், 'ரஜத் படிதார் போன்ற ஒரு இளம் வீரர் இந்த நேரத்தில் சதம் அடிப்பது எளிதானது அல்ல. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த செஞ்சுரியில் இதுவும் ஒன்று' என்றார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக ரஜத் படிதார் தனது திருமணத்தை தள்ளிபோட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது தந்தை மனோகர் படிதார் கூறும் போது, "ரஜத் படிதாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தேர்வு செய்திருந்தோம். படிதாரை ஐ.பி.எல். ஏலத்தில் யாரும் எடுக்காததால் மே 9-ந்தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்து சிறிய விழாவாக திருமணத்தை நடத்திட இந்தூரில் உள்ள ஒரு ஓட்டலை பதிவு செய்திருந்தோம். ஆனால் அதற்குள் பெங்களூரு அணி அவரை ஒப்பந்தம் செய்ததால் திருமணத்தை தள்ளிவைத்து விட்டோம். ஐ.பி.எல். முடிந்ததும் ரஜத் படிதார் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாட உள்ளார். இந்த போட்டி முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்