ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்...வாழ்த்திய விராட் கோலி

நடப்பு சீசனுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்திருந்தார்.

Update: 2024-05-23 08:18 GMT

அகமதாபாத்,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றோடு வெளியேறும் என்று கணிக்கப்பட்ட அந்த அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் எலிமினேட்டர் சுற்றில் நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது.

நடப்பு சீசனுக்கு முன்னதாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்த வருடத்துடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டபோது டெல்லி அணியில் தம்முடைய கெரியரை துவக்கிய அவர் அதன் பின் பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா மற்றும் பெங்களூரு என மொத்தம் 6 அணிகளுக்காக 17 வருடங்களில் 257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் மும்பை அணியில் 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ள அவர் 2022 சீசனில் பெங்களூரு அணியில் அற்புதமாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. இருப்பினும் தற்போது அவர் ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் எலிமினேட்டரில் பெங்களூரு தோல்வியை சந்தித்ததால் கலங்கிய கண்களுடன் பிரியாத மனதுடன் தினேஷ் கார்த்திக் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் விடை பெற்றார். அவருக்கு விராட் கோலி கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்