ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல்: விராட் கோலியை முந்திய ரோகித் சர்மா..!!

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

Update: 2023-10-18 17:09 GMT

Image Courtacy: ICCTwitter

துபாய்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் போன்றவை முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் போட்டி வீரர்களின் சமீபத்திய தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி உள்ளார். விராட் கோலி ஏழாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவர் 711 புள்ளிகள் பெற்றுள்ளார். அதேநேரத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் (719 புள்ளிகள்) பிடித்துள்ளார். அதே சமயம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.

தற்போதைய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மான் கில் 2-வது இடத்திலும் (818 புள்ளிகள்), ரோகித் 6-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசை

பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் தற்போது 660 புள்ளிகளை பெற்றுள்ளார். நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் இரண்டாவது இடத்திலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 641 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (ஏழு இடங்கள் முன்னேறி), தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (ஒரு இடம் முன்னேறி) கூட்டாக 14வது இடத்தில் உள்ளனர்.

ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசை

ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் இடம் பிடித்துள்ளார்.  வங்காளதேச அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன் 343 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்தியாவை பொறுத்த வரை ஹர்திக் பாண்டியா 229 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்