ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி: பெங்களூருவின் சாதனையை முறியடித்த ஐதராபாத்

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெங்களூருவின் சாதனையை ஐதராபாத் முறியடித்துள்ளது.

Update: 2024-03-27 15:58 GMT

ஐதராபாத்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில், ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுவரும் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். அகர்வால் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹெட்டுடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய ஹெட் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஹெட் 24 பந்தில் 62 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து அபிஷேக் சர்மாவுடன் எய்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க்ரம் உடன் கிளாசென் ஜோடி சேர்ந்தார். இருவரும் மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 277 ரன்கள் குவித்தது. கிளாசென் 80 ரன்களுடனும், மார்க்ரம் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற வரலாற்று சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் படைத்துள்ளது.

இதற்கு முன்பாக, 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாக 263 ரன்கள் இருந்தது. ஆனால், இன்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் சாதனையை ஐதராபாத் முறியடித்துள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெங்களூருவின் சாதனையை ஐதராபாத் முறியடித்துள்ளது. பெங்களூருவின் 263 ரன்கள் சாதனையை முறியடித்த ஐதராபாத் 277 ரன்கள் குவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்