டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே 117 ரன்களுக்கு ஆல் அவுட் - நெதர்லாந்து அசத்தல் பந்துவீச்சு...!

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Update: 2022-11-02 05:48 GMT

Image Courtesy: AFP 

அடிலெய்ட்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மாதவேரா, எர்வின் ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் மாதவேரா 1 ரன்னுக்கும், எர்வின் 3 ரன்னுக்கும், அடுத்து வந்த சகப்வா 5 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு அந்த அணியின் சீனியர் வீரர்கள் சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் பொறுமையாக ஆடி வந்த வில்லியம்ஸ் 28 ரன்னுக்கும், அதிரடியாக ஆடிய ராசா 40 ரன்னுக்கும், இதையடுத்து களம் புகுந்த மில்டன் ஷூம்பா 2 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அந்த அணியின் ரியான் பர்ல், லூக் ஜோங்வே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். அந்த அணியில் சிக்கந்தர் ராசா, சீன் வில்ல்லியம்சை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர்.

நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்