டி20 உலகக்கோப்பை; இந்திய அணியின் வெற்றியில் இந்த 2 பேர் தான் முக்கிய வீரர்களாக செயல்படுவார்கள் - ரவி சாஸ்திரி

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-05-07 09:59 GMT

கோப்புப்படம் 

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரை முன்னிட்டு அனைத்து அணிகளும் டி20 உலகக்கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, பும்ரா போன்ற சீனியர் வீரர்களும், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், சாம்சன் போன்ற இளம் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய வீரர்களாக செயல்படுவார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த தொடரில் 2 ஜென்டில்மேன்களை நீங்கள் பார்க்க வேண்டும். இருவருமே இடதுகை வீரர்கள். இருவருமே முதல் உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர். ஒருவர் ஜெய்ஸ்வால். அவரைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடிய அவர் டாப் ஆர்டரில் பயமின்றி தம்முடைய ஷாட்டுகளை அடிக்கக் கூடியவர்.

ஆனால் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஷிவம் துபேவை கண்டிப்பாக பாருங்கள். ஏனெனில் அவர் மேட்ச் வின்னர். வேடிக்கைக்காக சிக்சர்களை அடிக்கக்கூடிய இவர் ஸ்பின்னர்களை பந்தாடுவார். அவர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதாங்களுக்கு வெளியே பந்தை அடிக்கக்கூடியவர். மிகவும் பெரியதாக நீண்ட தூரத்தில் சிக்சர்கள் அடிக்கக்கூடிய அவர் சுழல் பந்துகளை தெறிக்க விடுபவர்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் தன்னுடைய ஆட்டத்தில் வேலை செய்துள்ள அவர் 5, 6-வது இடத்தில் வெற்றிக்கான சாவியை பிடிக்கக்கூடியவர். ஒருவர் 20 - 25 பந்துகளில் போட்டியை மாற்றுவதற்கு தேவைப்பட்டால் அவர் தான் உங்களுடைய வீரர்.

அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலான சமயங்களில் 200-ஐ தொடும். டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் 190, 200 ரன்களை அடித்து இந்தியா முன்னோக்கி செல்வதற்கு அவர் உதவுவார். எனவே இந்த இடது கை வீரரின் ஆட்டத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்