ஓய்விற்கு பிறகும் தொடரும் 'தல - சின்ன தல' நட்பு .... நெகிழவைத்த வீடியோ

மும்பைக்கு எதிரான போட்டி முடிந்து சென்னை அணியினர் அங்கிருந்து கிளம்பும்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2024-04-17 03:33 GMT

image courtesy: PTI

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சி.எஸ்.கே. அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி ரசிகர்களின் அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று அறிவித்ததால் இந்த ஆண்டு அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. அதன் காரணமாக தன்னால் முடிந்தவரை தோனி களத்தில் இறங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய தோனி கடைசி ஓவரின்போது பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து ஹர்திக் பாண்ட்யா வீசிய கடைசி நான்கு பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் இரண்டு ரன்கள் என 20 ரன்களை குவித்து அட்டகாசப்படுத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக சென்னை அணி 206 ரன்கள் குவித்தது மட்டுமின்றி அந்த போட்டியில் வெற்றி பெற தோனியின் இன்னிங்ஸ் மிக முக்கியமானதாக அமைந்தது.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டி முடிந்து அடுத்ததாக லக்னோவிற்கு புறப்பட்ட சென்னை அணியினர் அங்கிருந்து கிளம்பும்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட தோனி இம்முறையும் சற்று கால் வலி இருந்தாலும் ரசிகர்களுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இவ்வேளையில் மும்பையில் தாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது 'சின்ன தல' சுரேஷ் ரெய்னாவின் கையைப் பிடித்துக்கொண்டு படிக்கட்டில் இறங்கிய 'தல' தோனி பின்னர் பேருந்தில் ஏறுகிறார். ஓய்வு பெற்றாலும் தனது நண்பரான ரெய்னாவின் கையை பிடித்து தாங்கியபடி படியில் இறங்கிய தோனி சிரித்தபடியே பேருந்தில் ஏறினார். ஓய்விற்கு பிறகும் தன்னுடைய நெருங்கிய நண்பராக தோனிக்கு எப்போதும் ரெய்னா ஆதரவாக இருந்து வருகிறார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த நெகிழவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.எஸ். தோனியை 'தல' என்றும், சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல'என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்