இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி : வெற்றியை நெருங்கும் பாகிஸ்தான் அணி..!!

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 7 விக்கெட்கள் மீதம் உள்ளது.

Update: 2022-07-19 12:54 GMT

Image Tweeted By @ICC

காலே,

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 337 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 342 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இந்த ஜோடியில் இமாம் உல் ஹக் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த அசார் அலி 6 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய பாபர் அசாம் அப்துல்லா ஷபிக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 55 ரன்கள் எடுத்த நிலையில் அசாம் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 7 விக்கெட்கள் மீதம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்