அதுவே எங்களுடைய பலம் - ஆட்ட நாயகன் அஸ்வின் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Update: 2024-05-23 04:43 GMT

image courtesy: AFP

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் 2-வது தகுதி சுற்றுக்கு (குவாலிபயர் 2) முன்னேறியுள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173 ரன்களை ராஜஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், 3 ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட்இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 36 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஜோஸ் பட்லர், ஹெட்மயர் ஆகியோர் இல்லாததால் சமீபத்திய போட்டிகளில் சறுக்கிய தாங்கள் மீண்டும் பார்முக்கு வந்துள்ளதாக அஸ்வின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடியபோது ஏற்பட்ட காயத்துடன் இத்தொடரில் விளையாடுவதாக தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"சராசரி ஸ்கோரை அடிப்பதற்கே எங்களுடைய பேட்டிங் தடுமாறியது. ஏனெனில் நாங்கள் பட்லரை இழந்தோம். ஹெட்மயர் காயத்தை சந்தித்தார். இப்போட்டியில் சேசிங் செய்வதற்கு நாங்கள் அவசரப்பட்டோம் என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்த வெற்றியால் தன்னம்பிக்கை மீண்டும் வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் பகுதியில் என்னுடைய உடல் நன்றாக இல்லை என்று உணர்ந்தேன். எனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. எனக்கும் வயதாகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு நேரடியாக ஐ.பி.எல். தொடரில் களமிறங்குவது கடினமானது.

எனவே என்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் ஒரு முறை நீங்கள் ஐ.பி.எல். அணிக்காக வந்து விட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். நாங்கள் சரியான லென்த்தில் பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். போல்ட்க்கு கொஞ்சம் ஸ்விங் மற்றும் வேகம் கிடைத்தது. இரண்டாவது இன்னிங்சில் அதிக பனி இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. சேசிங்கில் எங்களுடைய வீரர்கள் நன்றாக அடித்தனர். இளமையும் அனுபவமும் கலந்திருப்பதே எங்களுடைய பலமாகும். தற்போது ஹெட்மயர் வந்து விட்டார். ரோவ்மன் பவல் சில பவுண்டரிகளை அடித்தார். நாங்கள் முன்னோக்கி செல்வதற்கான சரியான வேகத்தை பெற்றுள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்