‘எதிர்காலம் பிரகாசம்!’ இந்திய கால்பந்து அணி பயிற்சியாளரின் உற்சாகம்

இந்திய கால்பந்து அணியின் இந்த ‘கனவு ஓட்டத்தில்’, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் முக்கியமாக இருக்கிறார்.

Update: 2017-09-23 09:42 GMT
ந்திய கால்பந்து அணிக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் காலகட்டம் இது.

இன்னும் நாம் உலகத் தர வரிசையில் நூறைத் தாண்டித்தான் இருக்கிறோம் என்றாலும், 2015 மார்ச்சில் மிக மோசமாக 173–வது இடத்தில் இருந்ததை ஒப்பிடும்போது, தற்போதைய நிலை (97–ல் இருந்து சமீபத்தில்தான் 107–க்கு கீழிறங்கியது) எவ்வளவோ பரவாயில்லை.

இந்திய கால்பந்து அணி, சிறுசிறு உலக அணிகளைத்தான் தோற்கடிக்கிறது என்றபோதும், வெற்றி பாராட்டுக்குரியதுதானே? மெதுவாக, ஆனால் சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்தியா.

இங்கிலாந்து முன்னாள் வீரரான கான்ஸ்டான்டைன், இந்திய கால்பந்தில் நடக்கும் பல நல்ல மாற்றங்களின் பின்னணியாகத் திகழ்கிறார்.

அவரது பேட்டி...

‘பிபா’ உலகத் தரவரிசையில் 173–வது இடத்தில் இருந்து 97–வது இடத்துக்கு உங்களால் இந்திய அணியை எப்படி முன்னேற்ற முடிந்தது?

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது, நல்ல சுதந்திரம் அளித்திருக்கிறது. எனக்கு போதுமான உதவியாளர்கள், நல்ல தொழில்நுட்ப வசதி எல்லாம் வழங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் இந்திய அணி, சிறந்த ஓட்டல்களில்தான் தங்குகிறது. இவை எல்லாமே செலவுபிடிக்கும் வி‌ஷயங்கள்தான். ஆனால் இவை, வீரர்களிடம் மனரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை. தாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்று உணரும்போது வீரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நம்மை பிற நாட்டு அணிகள் மதிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, நாம் அவர் களைத் தோற்கடிப்பதுதான். நாம் அதிக போட்டிகளில் விளையாட விளையாட, நமது தரவரிசையும் உயரும்.

நமது அணி முன்னேறுகிறது என்பதைக் காட்டிய போட்டி எது?

எனது பயிற்சியில் சொந்த மண்ணில் இந்தியா ஓமனுக்கு எதிராக 2015 ஜூனில் மோதிய போட்டி எனக்கு மகிழ்ச்சி தந்தது. அந்தப் போட்டியில் நமது அணி 2–1 என்ற கோல் கணக்கில் தோல்வியற்றாலும், நான் விரும்புவதை நம் வீரர்களிடம் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்த போட்டி அது.

நீங்கள் செய்த முக்கியமான மாற்றம் என்ன?

நான் பயிற்சியாளர் பொறுப்பேற்றபோது, இந்திய அணி வீரர் களின் சராசரி வயது 30 ஆக இருந்தது. சர்வதேச கால்பந்தைப் பொறுத்தவரை இது மிகவும் ‘முதுமையானது’. அதை மாற்றுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். நேபாளத்துக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் ஜெர்ரி லால்ரின்ஜுவாலாவை முதல்முறையாகக் களமிறக்கினோம். அவருக்கு வயது 18. மற்றொரு இளம் வீரர் டேனியல் லாலிம்புயாவுக்கு 19 வயது. நமது அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எனக்கு அடுத்து பயிற்சியாளர் பொறுப்பேற்பவர் அதிகம் கஷ்டப்பட வேண்டியிராது.

இந்திய அணிக்குக் கிடைக்கும் சர்வதேசப் போட்டி வாய்ப்புகள் குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களா?

ஆமாம். முதல்முறையாக, அடுத்த ஆறு மாதங்களுக்கான  போட்டிகளை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். இதுபோல முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். அதனால்தான், தேசிய அணிக்கான விளையாட்டுப் போட்டிகள் அட்டவணை தயாரிப்பு முக்கியமாகிறது. அப்போதுதான் கிளப்கள் தங்கள் போட்டிகளை திட்டமிட்டு அமைக்க முடியும், கால்பந்து சம்பந்தப்பட்ட எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

2019 ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது எந்த அளவு முக்கியமானது?

அது நாம் சரியான திசையில் எடுத்துவைக்கும் பெரிய அடியாக இருக்கும். தற்போது நாம் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறோம். கடந்த இரண்டாண்டுகளில், பிற அணிகளுடன் சரிக்குச் சமமாக எப்படிப் போட்டியிடுவது என்று நாம் கற்றிருக்கிறோம். அடுத்து நாம், முக்கியமான போட்டிகளுக்குத் தகுதி பெறுவது எப்படி என்று அறிய வேண்டும். ஒரு குறிப்பிட்ட போட்டித் தொடர், இந்திய அணியின் எதிர்காலத்தையோ அல்லது எனது எதிர்காலத்தையோ தீர்மானித்து விடும் என்று நான் கருதவில்லை. நாம் தொடர்ச்சியாக வெல்ல வேண்டும். எப்போதோ ஒருமுறை வென்றுவிட்டு, பல ஆண்டுகளுக்கு தடுமாறுவதில் அர்த்தமில்லை.

உங்களால் இந்திய அணியில் கொண்டுவரப்பட்டவர்களில், அணிக்காக நீண்டகாலம் ஆடக்கூடியவர்கள் என்று நீங்கள் கருதுவது யார் யாரை?

ஜேஜே லால்பெகுலா, ரோவ்லின் போர்ஜஸ், சந்தேஷ் ஜிங்கன், விகாஸ் நாயுடு, சுமித் பாசி ஆகியோரைக் கூறலாம். தற்போது நிறைய புதிய வீரர்கள் வந்திருக்கிறார்கள். தங்களுக்குப் பின்னால் புதிது புதிதாய் வீரர்கள் வந்துகொண்டே இருப்பதை சீனியர் வீரர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேசிய முகாமுக்கு வீரர்களை அனுப்பாதது குறித்து  இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) பற்றியும், கிளப்புகள் பற்றியும் நீங்கள் விமர்சித்திருந்தீர்களே... தற்போது நிலைமை மாறியிருக்கிறதா?

தற்போது நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது. ஐ.எஸ்.எல்.லை நடத்தும் ஐஎம்ஜி– ரிலையன்ஸ், எனது கருத்துகள் பற்றி விவாதிப்பதற்கு அழைத்திருக்கிறது. தேசிய அணி சிறப்பாகப் பிரகாசிக்காதவரை, இந்திய கால்பந்து அதற்குரிய கவனத்தைப் பெறாது என்று நான் கூறினேன். இந்தியன் சூப்பர் லீக் வெகுவாக ஏற்கப்பட வேண்டுமானால், அதற்குரிய ஜன்னல், தேசிய அணிதான். நான் சொன்னதை அவர்கள் கவனத்தோடு கேட்டுக்கொண்டார்கள். தேசிய அணிக்குச் சிறந்த வீரர்களை வழங்கவும், அவர்கள் தயாராவதற்கு போதுமான நேரம் ஒதுக் கவும் தற்போது உண்மையான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியன் சூப்பர் லீக்கில் அதிக இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கைக்குத் தற்போது மதிப்பு அளிக்கப்படுவது போலத் தெரிகிறதே... உங்களுக்கு மகிழ்ச்சிதானே?

ஆமாம். நான் இதற்காக இரண்டரை ஆண்டுகாலமாக குரல் கொடுத்து வருகிறேன். நான் வெளிநாட்டு வீரர்களுக்கு எதிரானவன் இல்லை. அவர்களால் ஆட்டத் தரத்தை உயர்த்த முடியும். ஆனால் அவர்கள் சரியான நோக்கம், எண்ணத்துடன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்