ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’ - சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.

Update: 2020-03-15 00:18 GMT
கோவா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.யும், அட்லெடிகோ டி கொல்கத்தாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் 3-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னையின் எப்.சி.யும், அட்லெடிகோ டி கொல்கத்தாவும் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் இறுதி ஆட்டத்தில் மல்லுகட்டின. கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கரவொலி, ஆரவாரமின்றி தொடங்கிய இந்த ஆட்டத்தில் 34-வது வினாடியிலேயே சென்னை அணிக்கு கோல் வாய்ப்பு உருவானது. ரபெல் கிரிவெல்லாரோ அடித்த பந்தை கோல் பகுதியில் நின்ற கொல்கத்தா வீரர் சாதுர்யமாக தடுத்தார். 4-வது நிமிடத்தில் சென்னை அணி கோல் அடிப்பது போல் வந்து கோட்டை விட்டது. அதாவது சென்னை அணியின் நட்சத்திர வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் அடித்த ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.

10-வது நிமிடத்தில் கொல்கத்தா முதலாவது கோலை திணித்தது. கொல்கத்தா கேப்டன் ராய்கிருஷ்ணா தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் ஜாவியர் ஹெர்னாண்டஸ் பிரமாதமாக உதைத்து வலைக்குள் அனுப்பினார். 22-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டுகள் தடுக்கப்பட்டன. 31-வது நிமிடத்தில் ஸ்கெம்ப்ரி தலையால் முட்டி கோல் நோக்கி திருப்பிய பந்தை கொல்கத்தா கோல் கீப்பர் அரிந்தம் பட்டாசார்ஜா பாய்ந்து விழுந்து தடுத்து வெளியே தள்ளினார். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (58 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (9) முதல் பாதியில் சென்னை வீரர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்திய போதிலும் அதிர்ஷ்டம் தான் இல்லை.

பிற்பாதியின் 48-வது நிமிடத்தில் கொல்கத்தா மேலும் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் எடு கார்சியா அடித்த பந்து கார்னர் பகுதியில் பட்டு வலைக்கு முத்தமிட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான சென்னை வீரர்கள் பதிலடி கொடுக்க ஆக்ரோஷமாக ஆடினர். 69-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோல் திருப்பினார். அதன் பிறகு சென்னை வீரர்களின் போராட்டத்துக்கு பலன் இல்லை. வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 4 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜாவியர் ஹெர்னாண்டஸ் மறுபடியும் கோல் அடித்து சென்னை அணியின் கனவை தகர்த்தார்.

முடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே 2014, 2016-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருக்கிறது. இதன் மூலம் ஐ.எஸ்.எல். வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்தது. 3-வது முறையாக இறுதி ஆட்டத்தில் கால்பதித்த சென்னை அணி அதில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

சென்னை அணி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் ஏமாற்றம் அளித்தாலும், பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் மைக்கேல் ரிஜின், மைக்கேல் சூசைராஜ் ஆகிய இரு தமிழக வீரர்கள் அங்கம் வகித்தது ஆறுதலான விஷயமாகும்.



 

தங்க ஷூ விருதை பெற்றார், வல்ஸ்கிஸ்


இந்த தொடரில் மொத்தம் 294 கோல்கள் பதிவாகின. இதில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஒக்பீச் (கேரளா பிளாஸ்டர்), வல்ஸ்கிஸ் (சென்னையின் எப்.சி.), ராய் கிருஷ்ணா (கொல்கத்தா) ஆகியோர் தலா 15 கோல்களுடன் முன்னிலை வகித்தனர். இவர்களில் வல்ஸ்கிஸ் தங்க ஷூ விருதை தட்டிச்சென்றார்.


மேலும் செய்திகள்