ஈராக் கால்பந்து ஜாம்பவான் கொரோனாவுக்கு பலி

ஈராக் கால்பந்து விளையாட்டில் ஜாம்பவனாக அறியப்படும் அகமத் ராதி கடந்த வாரம் உடல்நலக்குறைவால் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-06-21 22:08 GMT
பாக்தாத்,

ஈராக் கால்பந்து விளையாட்டில் ஜாம்பவனாக அறியப்படும் அகமத் ராதி கடந்த வாரம் உடல்நலக்குறைவால் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொ ரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி அவரை அங்கிருந்து ஜோர்டானுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் அவரது உயிர் பிரிந்தது.

56 வயதான அகமத் ராதி ஈராக் கால்பந்து அணிக்காக 121 ஆட்டங்களில் விளையாடி 62 கோல்கள் அடித்துள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடித்த ஒரே ஈராக் வீரர் இவர் தான். 1986-ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஈராக் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இதில் 59-வது நிமிடத்தில் அகமத் ராதி கோல் அடித்து இருந்தார். 1988-ம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார். கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தன்னை அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது மறைவுக்கு கால்பந்து வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்