இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுபாஷ் மரணம்

1970-களில் இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய அவர் 1970-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்தார்.

Update: 2022-01-22 21:52 GMT
கோப்புப்படம்
கொல்கத்தா, 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரும், புகழ்பெற்ற கிளப் அணிகளின் முன்னாள் பயிற்சியாளருமான மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுபாஷ் பவுமிக், கிட்னி, சர்க்கரை மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் இதய பிரச்சினை காரணமாக சுபாஷ் பவுமிக் எக்பால்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். 

72 வயதான அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். 1970-களில் இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய அவர் 1970-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்தார். 1974-ம் ஆண்டுக்கான ஆசிய போட்டிக்கான அணியிலும் இடம் பெற்றார். இந்திய அணிக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 9 கோல்கள் அடித்துள்ளார். 

கொல்கத்தாவின் புகழ் பெற்ற கிளப்களான ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகளுக்காக விளையாடி இருக்கும் அவர் நிறைய கோல்கள் அடித்து கதாநாயகனாக ஜொலித்தார். 1979-ம் ஆண்டில் கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் உள்ளிட்ட பல்வேறு கிளப் அணிகளின் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் பரிணமித்தார். சுபாஷ் பவுமிக் மறைவுக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்