இந்திய அணியில் எனது இலக்கு இதுதான் - ஆக்கி வீராங்கனை மெரினா லால்ராம்ங்காகி

இந்திய ஆக்கி அணியில் தனது இலக்கு குறித்து மெரினா லால்ராம்ங்காகி கூறியுள்ளார்.

Update: 2024-04-24 10:20 GMT

image courtesy:AFP

புதுடெல்லி,

மிசோரமைச் சேர்ந்த இளம் ஆக்கி வீராங்கனையான மெரினா லால்ராம்ங்காகி, சமீபத்தில் 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஆக்கி அணியின் முக்கிய குழுவில் இடம் பிடித்தார். இந்தக் குழு தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்று வருகிறது. அவரது சிறந்த திறமை மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின் காரணமாக அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

மெரினா, புனேவில் நடந்த 14-வது ஆக்கி இந்தியா சீனியர் பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதில் அவர் மூன்று கோல்களை அடித்தார். களத்தில் அவரது சுறுசுறுப்பு மற்றும் ஆற்றலின் மூலம் கவனத்தை ஈர்த்தார். மேலும் எப்.ஐ.எச். மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை தொடர்களில் இவரது செயல்பாடுகள் பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த 33 பேர் கொண்ட முக்கிய குழுவில் இடம்பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் கூறுகையில், "முக்கிய குழுவில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்தவுடன் மகிழ்ச்சியால் மூழ்கிவிட்டேன். இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. என்னுடைய திறமைகள் மீது எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்தது. வெற்றிகரமான சோதனைகள் என் நம்பிக்கையை மறுபடியும் உறுதிப்படுத்தின." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "2026 மகளிர் எப்.ஐ.எச். ஆக்கி உலகக்கோப்பை மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதே எனது இலக்கு. இருப்பினும் தற்போது இந்திய அணியில் இடம் பிடிப்பதில்தான் எனது கவனம் உள்ளது. ஆயினும்கூட, எனது சிறந்த விளையாட்டை கொடுப்பதற்கும் எனது நாட்டை பெருமைப்படுத்துவதற்கும் நான் முழுமையாக உறுதி எடுத்துள்ளேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்