துளிகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு (2018) இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2017-08-17 21:45 GMT

* இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்க இருப்பதால் இந்த போட்டியை நடத்த அனுமதி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அரசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தோம். இதற்கு பதில் எதுவும் வராததால் அந்த போட்டி மலேசியாவுக்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சீனியர் ஆசிய போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கேட்டு கடிதம் எழுத உள்ளோம். ஆசிய போட்டியில் இந்தியா அல்லது பாகிஸ்தான் அணி விளையாடவில்லை என்றால் அந்த போட்டிக்கு அர்த்தமே இருக்காது. இது இரு அணிகள் இடையிலான போட்டி தொடர் கிடையாது. இது ஐ.சி.சி.யின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச போட்டியாகும்’ என்று தெரிவித்தார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் கழற்றி விடப்பட்ட உமர் அக்மல், அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார். இது குறித்து உமர் அக்மல் அளித்த பேட்டியில், ‘எனது உடல் தகுதி பிரச்சினையை சரி செய்ய பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை அணுகிய போது அவர் என்னை மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இன்ஜமாம், முஸ்தாக் அகமது ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. அத்துடன் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் பயிற்சி செய்யவும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார். எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது ஒருவரை திட்டிக் கொண்டு தான் இருப்பார். அவரது இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதனை அடுத்து அனுமதி இல்லாமல் மீடியாக்களிடம் பேசியதற்கு விளக்கம் அளிக்கும் படி உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் அடித்த ஹர்திக் பாண்ட்யா தனது தந்தையின் நீண்ட நாள் கனவான சொகுசு காரை வாங்கி கொடுத்துள்ளார். தான் இலங்கையில் இருந்தாலும் தனது அப்பாவுக்கு உடனடியாக கார் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய ஹர்திக் பாண்ட்யா, தனது சகோதரர் குணால் பாண்ட்யாவுக்கு வீடியோ கால் செய்து, அதன் மூலம் தனது அப்பாவுடன் பேசி அவர் விருப்பப்படி சிவப்பு நிற காரை வாங்கி கொடுத்து இருக்கிறார். இதனை டுவிட்டரில் ஹர்திக் பாண்ட்யா பதிவு செய்துள்ளார். அதில், ‘எனக்காக பல தியாகங்களை செய்த என்னுடைய அப்பாவுக்கு காரை கொடுத்து சந்தோஷப்படுத்த நினைத்தேன். அதனை இப்போது செய்துள்ளேன். எனது தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். அது எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை அளித்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* பல்கேரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சோபியா நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஸ்வோனிமிர் டுர்கின்ஜாக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். நேற்று முன்தினம் தனது 16-வது பிறந்தநாளை கொண்டாடிய உத்தரகாண்டை சேர்ந்த ல்க்‌ஷயா சென்னுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

* யங் சேலஞ்சர்ஸ் கால்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி சென்னை பட்டாபிராமில் உள்ள சி.வி.டி. மைதானத்தில் நாளை முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் சுங்க இலாகா, ஐ.சி.எப்., மாநகர போலீஸ் உள்பட 16 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை யங் சேலஞ்சர்ஸ் கால்பந்து கிளப் செயலாளர் வி.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்