தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.;

Update:2017-09-28 05:45 IST
சென்னை,

2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற பாலமுருகன், தியாகராஜன், எஸ்.அர்ச்சனா, நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற ஐஸ்வர்யா செல்வகுமார், நிவ்யாராஜா, வாள்வீச்சு போட்டியில் பதக்கம் வென்ற எம்.ஜே. தினேஷ், தேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை வென்ற பி.ஜானிதர்மா, எம்.தினேஷ் பாபு, டேபிள்டென்னிஸ் போட்டியில் பதக்கங்களை வென்ற கே.ஷாமினி, எஸ். நரசிம்மாபிரியா, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற என்.நிவேதா, சந்தியா வின்பேட், கைப்பந்து போட்டியில் பதக்கங்களை வென்ற எஸ்.பிரபாகரன், எ.சபரிராஜன், ஜி.ஆர்.வைஷ்ணவ், வி.ஜான் கிறிஸ்டோபர், எஸ்.கனகராஜ், எம்.நவீன்ராஜா ஜேக்கப், கூடைப்பந்து போட்டியில் பதக்கங்களை வென்ற ஜஸ்வர்யா, வி.
பவானி, பவுலினா ஜோசப் ஆகிய தமிழகத்தை சேர்ந்த 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.79 லட்சமும், அவர்களது பயிற்சியாளர்கள் 17 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் என மொத்தம் ரூ.90 லட்சத்து 85 ஆயிரத்துக்கான காசோலைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

அத்துடன் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டுகளில் மென்மேலும் சிறந்து விளங்கி மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என வாழ்த்தினார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற 9-வது ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பி. விக்காஸ், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வி. லெனார்ட் மற்றும் சென்னையை சேர்ந்த தனுஷ் ஆகிய 3 மாணவர்கள் பதக்கங்கள் வென்றுள்ளனர். அவர்கள் 3 பேரும் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2½ லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1½ லட்சமும் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கவும், இந்த நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு, வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஊக்கத்தொகையில் 15 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்கள் வென்ற பி. விக்காஸ் ரூ.9½ லட்சமும், 1 தங்கம் வென்ற வி. லெனார்ட் ரூ.4 லட்சமும், 1 வெள்ளி வென்ற சு. தனுஷ் ரூ.2½ லட்சமும் என மொத்தம் ரூ.16 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கவும், இவர்களின் பயிற்சியாளர்கள் ஏ.சரோஜினி தேவிக்கு ரூ.1,42,500-ம், ஏ.கர்ணனுக்கு ரூ.60 ஆயிரமும், வி.வீரபத்ரனுக்கு ரூ.37,500-ம் என மொத்தம் ரூ.2.40 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்