கபடி.. கில்லாடி..!

இந்தியாவின் வட மாநில எல்லையில் இருந்து வந்து, இந்தியாவின் தென்மாநில எல்லை அணியான ‘தமிழ் தலைவாஸ்’ அணிக்காக கபடி.. கபடி.. என பாடியபடி களம் புகுந்து கலக்கிக்கொண்டிருக்கிறார் அஜய் தாஹூர்.

Update: 2017-10-07 00:15 GMT
மாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஹெய்லிங் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர்தான் இந்திய கபடி அணியின் கேப்டன் என்பதால், இவருக்கு எந்த வித அறிமுகப் படலமும் தேவையில்லை.

தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி போட்டிகளில் ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் கேப்டனாக களம் இறங்கியிருக்கும் அஜய் தாஹூரிடம் சின்ன உரையாடல்...

கபடி விளையாட ஆரம்பித்த கதையைச் சொல்லுங்கள்?

கபடி.. கிராமங்களோடு பின்னிப்பிணைந்த விளையாட்டு. கிராமப்புற மாணவர்களின் பேச்சிலும், மூச்சிலும் கபடியே நிறைந்திருக்கும். நிறைய பேர் விளையாடும் ஆர்வத்தில் உணவு சாப்பிடாமலும் இருந்துவிடுவார்கள்; அவர்களால் கபடி கானத்தை பாடாமல் இருக்க முடியாது. அத்தகைய கிராமப்புற சூழலில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், என்னுடைய ரத்தத்தில் ‘கபடி’ அணுக்களே நிறைந்திருக்கின்றன. 8 வயதிலேயே கைதேர்ந்த கபடி வீரனாக மாறிவிட்டதால், இமாச்சல பிரதேசத்தில் எந்த மூலையில் கபடி போட்டிகள் நடத்தப்பட்டாலும்.... கோதாவில் இறங்கிவிடுவேன். அப்படித்தான் கபடி வாழ்க்கைக்குள் நுழைய ஆரம்பித்தேன்.

விளையாட்டை, வாழ்க்கையாக மாற்றியது எப்படி?

மலை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கடினமான ஒன்று. சொந்த ஊரை காலி செய்துவிட்டு, அண்டை மாநிலங்களில் குடியேறினால் மட்டுமே, சில ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். அதனால் அரசு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால், கபடி விளையாட்டும் என்னுடனே வளர்ந்தது. இந்திய கபடி அணியில் விளையாட வேண்டும். இல்லையேல், கபடி விளையாட்டினால் அரசு வேலை கிடைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் வளர்ந்தேன். ஆசை நிறைவேறியது. இந்திய கபடி அணியில் கால் பதித்து, கபடி கானம் பாடி பல சர்வதேச வெற்றிகளை பெற்றுக்கொடுத்தேன்.

கபடி வாழ்க்கையில் நம்பமுடியாத திருப்பம் எது?

ஒரு வழியாக இந்திய கபடி அணியில் இடம் பிடித்துவிட்டேன். அந்த சமயத்தில் நான் மிகவும் ஒல்லியாக இருந்ததால், எல்லா ரெய்டிலும் என்னை பிடித்துவிடுவார்கள். இதைக் கவனித்த தேர்வுக் குழுவினர், இந்திய அணியில் இருந்து என்னை கழற்றிவிட நினைத்தனர். உண்மை தெரியவந்ததும் மனதளவில் உடைந்துவிட்டேன். இருப்பினும் பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி, உடலை வலுப்படுத்தும் உணவுகளை உண்ண ஆரம்பித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 20 நாட்களில் 15 கிலோ எடை கூடியது. சாப்பிடுவதும் சுலபமில்லை என்பதை உணர்ந்து கொண்ட நாட்கள் அது. உடல் எடை கூடியதும் தான் இந்திய அணியில் நிலையாக இடம்பிடித்தேன்.

‘தவளைத் தாவலை’ எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

டோனிக்கு, ஹெலிகாப்டர் ஷாட் போன்று, எனக்கு தவளைத் தாவல் ஒரு ஸ்டைலாக அமைந்துவிட்டது. தவளை தாவல் என்பது நம்மை பிடிக்க வருபவர்களின் முதுகில் கைவைத்து, அந்த அழுத்தத்தின் மூலம் கோட்டிற்குப் பாய்வது. கிட்டத்தட்ட தவளை போன்று கை களும், கால்களும் நகர்வதால் அதை தவளைத் தாவலாக மாற்றிவிட்டனர். இந்த ஸ்டைலை பலரும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருப்பினும் நான் எல்லா ரெய்டிலும் பயன்படுத்தியதால், என்னுடைய தனிப்பட்ட ஸ்டைலாக அது மாறிவிட்டது. இந்த யுக்தியை பயன் படுத்தி நிறைய புள்ளிகளை அள்ளி வந்திருக்கிறேன்.

உங்களுடைய பலம் எது?

உயரமும், உடல் எடையும் தான், கபடி வீரர்களின் பலம். 6.2 அடி உயரம் இருப்பதால், என்னால் எதிரணியினரின் மத்திய கோட்டிலிருந்து, எல்லை கோட்டை சுலபமாக தொட்டுவிட முடியும். அதேபோன்று... எதிரணியினரின் நிறை குறைகளை வெகு விரைவாக கண்டறிந்துவிடுவதால், வெற்றிப் புள்ளிகளை அதிகமாக பெற்றுவருகிறேன்.

கடைசி ரெய்டில் வெற்றிக்கு தேவையான புள்ளிகளை தொட்டு வருது பற்றி?

‘புரோ கபடி’ ஆரம்பித்தபோது பெங்களூரு அணிக்காக விளையாடினேன். கடந்த ஆண்டு புனேக்காக விளையாடினேன். இம்முறை தமிழ் தலைவனாக தெறிக்க விடுகிறோம். புதிய அணி என்பதால் வீரர் களுக்கு இடையே புரிந்துணர்வு குறைவாக இருந்தது. இதற்கிடையில் மொழி பிரச்சினைகளும் இருந்தன. ஆனால் தற்போது அனைத்தும் சீராகிவிட்டது. ஓர் அணியாக செயல்படுகிறோம். அதனால் தான் கடந்த 10 ஆட்டங்களில் பல வெற்றிகளை குவிக்க முடிந்தது. 

கடைசி ரெய்டில் புள்ளிகளை எடுப்பது கடினமான ஒன்று  என்றாலும் எனக்குப் பழகிவிட்டது. அதிலும் வெற்றிக்கு 2 அல்லது 3 புள்ளிகள் தேவைப்படும் நிலையில் ரெய்டு செல்வது பதற்றமானதாக அமைந்துவிடும். அதுபோன்ற சூழல்களில் மனதை ஒருமுகப்படுத்தி, எதிரணியினரின் தவறான அசைவிற்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களது தவறான அசைவுகளைத் தான் நமக்கான வெற்றிப் புள்ளிகளாக மாற்ற முடியும்.

‘தமிழ் தலைவாஸ்’ அணியில் விளையாடுவது பற்றி?

தமிழ்நாட்டையும், கபடி விளையாட்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. வட இந்திய பகுதிகளில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் கபடி விளையாட யோசிப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. வயதான 

முதியவர்களும்  கபடி விளையாடுகிறார்கள். மீசையை முறுக்கிவிட்டபடி கபடி கானம் பாடுகிறார்கள். தமிழக கிராமப்புறங்களில் கபடி விளையாடும் சிறுவர்களை வெகு விரைவில் இந்திய கபடி அணியில் பார்க்கலாம். ஏனெனில் வருங்காலம் அவர்களுடையது. ஆம்! ‘புரோ கபடி’ போட்டி பல இளம் கபடி வீரர்களை உருவாக்கிவிடும்.

 கபடியின் மூலம் சம்பாதித்தது?

பணம், புகழ்... போன்றவற்றை விட மரியாதையை சம்பாதித்திருக்கிறோம். ஒருமுறை மும்பையில் நடைபெற்ற போட்டியை முடித்துக்கொண்டு ஓட்டல் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த ஓட்டலின் வரவேற்பு அறையில் சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனே அங்கிருந்தனர். அதைக் கவனித்ததும் கபடி வீரர்கள், சினிமா நட்சத்திரங்களை நோக்கி ஓடினர். ஆட்டோகிராப், போட்டோகிராப் வாங்குவது அவர்களது திட்டமாக இருந்தது. 

பாலிவுட்டின் பிரபல நடிகர்–நடிகைகள் என்பதால், வழக்கம் போலவே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. ஒருவழியாக அவர்களை நெருங்கியதும், நாங்கள் ஆட்டோகிராப் கேட்டு காகிதத்தை நீட்டுவதற்குள், அக்‌ஷய் குமார் எங்களிடம் ஆட்டோகிராப் கேட்டு டைரியை நீட்டினார். அத்துடன், ‘நாங்கள் தான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கவேண்டும். நாங்கள் பிழைப்புக்கு தான் கதாநாயகர்கள். ஆனால் நீங்கள் நிஜத்திலேயே நாயகர்கள்’ என்று வாழ்த்திப் பேசினார். அந்த காலகட்டத்தில் புரோ கபடியும் இல்லை. இன்று கிடைக்கும் புகழ், மரியாதையும் இல்லை. அந்த சூழ்நிலையிலும், பிசியான நட்சத்திரம் ஒருவர் கபடி விளையாட்டை ரசித்து பார்த்து வருவதை நினைத்து பெருமைப்பட்டோம். கூடவே தீபிகா, அக்‌ஷயுடன் நின்றபடி செல்பியும் எடுத்துக்கொண்டோம். 

‘புரோ கபடி’ போட்டிகள் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது?

30 அல்லது 40 கபடி அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வந்த டோர்னமெண்ட் போட்டிகள், புரோ கபடி ஒளிபரப்பிற்கு பின்பாக 100–க்கு மேற்பட்ட கபடி அணிகளை உருவாக்கி இருக்கிறது. அதனால் ஒரு டோர்னமெண்ட் நடத்தி முடிக்க ஒரு மாதமாகிறது.

மேலும் செய்திகள்