துளிகள்

மலேசியாவில் நடந்து வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி தனது கடைசி லீக்கில் 1-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் நேற்று தோல்வி அடைந்தது.

Update: 2018-02-08 20:30 GMT
* மலேசியாவில் நடந்து வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி தனது கடைசி லீக்கில் 1-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் நேற்று தோல்வி அடைந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததால் இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

* முன்னாள் வீரர்கள் ஷேவாக் தலைமையில் டையமன்ட்ஸ் லெவனும், அப்ரிடி தலைமையில் ராயல்ஸ் லெவனும் மோதிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸ் ஐஸ்கட்டி மைதானத்தில் நேற்று நடந்தது. புதுமையான இந்த ஐஸ்கட்டி மைதானத்தில் நடுவில் மட்டும் பவுலிங் செய்ய ஏதுவாக விரிப்பு போடப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த ஷேவாக் அணி 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷேவாக் 62 ரன்கள் (31 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இந்த இலக்கை அப்ரிடி அணி 15.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

* 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் டிராவில் முடிந்தது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு-கோவா அணிகள் மோதுகின்றன.

* விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம்-மும்பை அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 48.3 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆர்.அஸ்வின் 41 ரன்னும், ஜெகதீசன் 31 ரன்னும் எடுத்தனர். கவுசிக் காந்தி, வாஷிங்டன் சுந்தர் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து ஆடிய மும்பை அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

* டாக்காவில் நேற்று தொடங்கிய வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னில் ஆட்டம் இழந்தது. குசல் மென்டிஸ் (68 ரன்), ரோஷன் சில்வா (56 ரன்) அரைசதம் அடித்தனர். அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்