குளிர்கால ஒலிம்பிக்: சுவீடன் வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்

23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது.

Update: 2018-02-15 21:00 GMT

பியாங்சாங்,

23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான பையத்லான் தனிநபர் பிரிவில் சுவீடன் மங்கை 22 வயதான ஹன்னா ஓபெர்க் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

பையத்லான் பந்தயத்தில், கம்பு ஊன்றி 15 கிலோமீட்டர் தூரம் பனியில் சறுக்க வேண்டும். இடையில், துப்பாக்கி சுடுதலிலும் திறமையை காட்ட வேண்டும். துப்பாக்கி சுடுதலில் இலக்கை தவற விடும் போது, அதற்கு தண்டனையாக பனிச்சறுக்கு ஓட்டத்தில் கூடுதல் நேரம் சேர்த்துக் கொள்ளப்படும்.

87 பேர் களம் இறங்கிய விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த ஹன்னா ஓபெர்க், துப்பாக்கி சுடுலில் 4 முறையும் இலக்கை சரியாக சுட்டு அசத்தினார். முடிவில் அவர் 41 நிமிடம் 07.2 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். சுலோவக்கியாவின் அனஸ்டசியா குஸ்மினா (41 நிமிடம் 31.9 வினாடி) வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின் லாரா டால்மீயர் வெண்கலப்பதக்கமும் (41 நிமிடம் 48.4 வினாடி) பெற்றனர். லாரா டால்மீயருக்கு இது 3–வது பதக்கமாகும். ஏற்கனவே பையத்லான் ஸ்பிரின்ட், பர்சுய்ட் ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருந்தார்.

இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பங்கேற்ற இரண்டு இந்தியர்களில் ஒருவரான ஷிவ கேசவன் ஏற்கனவே தோற்று வெளியேறி விட்டார். அடுத்த இந்தியரான ஜெகதீஷ்சிங் இன்று கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் போட்டியில் களம் காண இருக்கிறார்.

மேலும் செய்திகள்