சென்னையில் பாய்மர படகு போட்டி 27–ந் தேதி தொடக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி அலோக் பட்நாகர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

Update: 2018-04-24 20:45 GMT

சென்னை, 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி அலோக் பட்நாகர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய கடற்படை மற்றும் ராயல் மெட்ராஸ் பாய்மரப்படகு கிளப் சார்பில் சென்னையில் பாய்மரப்படகு போட்டியை நடத்தப்படுகிறது. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த போட்டி சென்னை காசிமேடு மீன்பிடி படகு நிறுத்தும் இடத்தின் அருகில் இருந்து 27–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 29–ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, குஜராத், மும்பை, விசாகப்பட்டினம் உள்பட பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தமான் வீரர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

3 கடல்மைல் தூரம் சென்று திரும்பும் வகையில் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 80 பேர் பெயர் பதிவு செய்து உள்ளனர். லேசர் உள்பட பல்வேறு ரக படகுகள் போட்டியில் கலந்து கொள்கின்றன. ஒரு நாளைக்கு 3 போட்டிகள் வீதம் மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) பயிற்சி நடக்கிறது. 27–ந்தேதி காலையில் தொடக்க விழா முடிந்ததும், பகல் 12 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஐ.என்.எஸ். அடையாறு அதிகாரி கேப்டன் சுரேஷ், ராயல் மெட்ராஸ் பாய்மரப்படகு கிளப் தலைவர் நந்தகுமார், செயலாளர் சிதம்பரம் உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்