யாசர் டோகு சர்வதேச மல்யுத்தப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா, பிங்கி தங்கம் வென்று அசத்தல்

யாசர் டோகு சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா மற்றும் பிங்கி ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். #YasarDoguInternational

Update: 2018-07-30 08:18 GMT
இஸ்தான்புல்,

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற போட்டியில், மகளிர் பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிங்கி 6-3 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் ஒல்கா ஷனேடரை வீழ்த்தி தங்கம் வென்றார்.  

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான பஜ்ரங் புனியா, 70 கிலோ எடைப்பிரிவில் உக்ரைனின் அன்ட்ரி கியோடோஸ்கி காயம் காரணமாக வெளியேறியதால், களமிறங்காமலேயே தங்கம் வென்றார்.

சீமா, பூஜா தண்டா ஆகியோர் முறையே 53 கிலோ, 57 கிலோ எடைப்பிரிவுகளில் வெள்ளி வென்றனர். ஆடவர் 61 கிலோ இறுதியில் சந்தீப் டோமர் 2-8 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானின் மொஹமதுபாகரிடம் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக் 62 கிலோ எடைப்பிரிவில் எந்த பதக்கமும் வெல்லாமல் ஏமாற்றினார். மேலும் சங்கீதா போகட் (59 கிலோ), கீதா (65 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இந்தப் போட்டிகளில் இந்தியா மொத்தமாக 2 தங்கப் பதக்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பெண்கள் மட்டும் 7 பதக்கங்களை வென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்