ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் நேற்று இந்தியா மேலும் 2 வெள்ளிப் பதக்கம் வென்றது.

Update: 2018-08-20 22:45 GMT
ஜகர்தா,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா, பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ரவிகுமார் (626.7 புள்ளிகள்), தீபக்குமார் (626.3 புள்ளிகள்) ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

8 வீரர்கள் களம் கண்ட இறுதிப்போட்டியில் இந்திய வீரர் தீபக்குமார் 247.7 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனா வீரர் ஹரோன் யங் 249.1 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன தைபே வீரர் ஷாசுயன் லூ 226.8 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர் ரவிகுமார் 205.2 புள்ளிகள் எடுத்து 4-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

டெல்லியை சேர்ந்த 30 வயது விமானப்படை வீரரான தீபக்குமார் ஏற்கனவே உலக கோப்பை மற்றும் காமன்ல்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறார்.

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ‘டிராப்’ பிரிவு பந்தயத்தில் 19 வயதான இந்திய வீரர் லக்‌ஷய் ஷெரோன் 43 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். சீன தைபே வீரர் குன்பி யங் 48 புள்ளிகள் குவித்து போட்டி சாதனையை சமன் செய்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார். கொரியா வீரர் டேம்யோங் அன் 30 புள்ளிகள் சேர்த்து வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்திய வீரர் மனவ்ஜித் சிங் சந்து 26 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான டிராப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா தோமர் 6-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரேயாசி சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறினார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா 5-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை இளவேனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் தகுதி சுற்றுடன் நடையை கட்டினார்.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது. முதல் நாளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டேலா-ரவிகுமார் இணை வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.

மேலும் செய்திகள்