வாழ்வாதாரத்திற்காக தேனீர் விற்கும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஹரிஷ் குமார், தனது வாழ்வாதாரத்திற்காக தேனீர் விற்று வருகிறார். #AsianGames #HarishKumar

Update: 2018-09-07 03:16 GMT
புதுடெல்லி,

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹரிஷ் குமார், செபாக் டக்ரோ விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 

ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவுற்ற நிலையில் நாடு திரும்பிய ஹரிஷ் குமார், வாழ்வாதாரத்திற்காக தேனீர் விற்று வருகிறார். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் 2011 ஆம் ஆண்டு செபாக் டக்ரோ விளையாட்டை ஆட ஆரம்பித்தேன். என்னுடைய குருநாதர் ஹேம்ராஜ் என்னை இந்த விளையாட்டிற்குள் கொண்டு வந்தார். அவர் தான் என்னை இந்திய விளையாட்டுக்கழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.  அதன்மூலம் நான் மாதாந்திர நிதி தொகையும், உபகரணங்களையும் பெற்று கொண்டேன். இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தினமும் பயிற்சி மேற்கொள்வேன். 

என் குடும்பம் அதிக உறுப்பினர்களை கொண்டது. ஆனால், வருமானம் என்பது மிகக்குறைவு. இதனால் நான் என் பெற்றோர்கள் நடத்தி வரும் சிறிய தேனீர் கடையில் அவர்களுக்கு உறுதுணையாய் செயல்பட்டு வருகிறேன். தினமும் நான்கு மணி நேரம், 2 முதல் 6 வரை பயிற்சி மேற்கொள்வேன். எதிர்காலத்தில் என் குடும்பத்தை காப்பாற்ற எனக்கு ஒரு நல்ல வேலை தேவைப்படுகிறது எனக் கூறினார்.

மேலும் செய்திகள்