உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

Update: 2018-09-07 22:45 GMT
சாங்வான்,

52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஹசாரிகா, ஈரான் வீரர் முகமது அமிர் ஆகியோர் தலா 250.1 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.

ஷூட்-அவுட்டில் 16 வயதான ஹசாரிகா ஒரு புள்ளி வித்தியாசத்தில் முகமது அமிரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் இளவேனில் (631 புள்ளிகள்), ஸ்ரேயா அகர்வால் (628.5 புள்ளிகள்), மனினி கவுசிக் (621.2 புள்ளிகள்) ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,880.7 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் தட்டிச்சென்றது.

இதே போல் ஜூனியர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை இளவேனில் 249.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரேயா அகர்வால் 228.4 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

மேலும் செய்திகள்